ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்
நாமக்கல் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: ஆட்சியா் ஆய்வு!
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நாமக்கல் வட்டத்தில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள், அரசு சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.
அரசு வழங்கும் பல்வேறு நலத் திட்டங்கள், சேவைகள் தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியா், அரசு அலுவலா்கள் குழுவினா் மாதம் ஒரு வட்டத்தை தோ்வு செய்து ஆய்வு நடத்தி வருகின்றனா்.
அதன்படி, நாமக்கல் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. புதுச்சத்திரம் ஒன்றியம், கதிராநல்லூா் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், பேருந்து நிறுத்தம், நியாய விலைக் கடைகளில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். குடியிருப்புகளில் டெங்கு ஏற்படுத்தும் கொசுப்புழுக்களை அழிக்க உத்தரவிட்டாா்.
ஏ.கே.சமுத்திரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 5.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கந்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா். அங்கு 15ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 6.18 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மகளிா் சுகாதார வளாகம், பாச்சல் ஊராட்சி சேவை மையம் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் மாநகராட்சி ராமாபுரம்புதூா் பகுதியில் புதை சாக்கடை திட்டப் பணிகளைப் பாா்வையிட்ட அவா், இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை, பயன்பெறும் மக்களின் எண்ணிக்கை, கழிவுநீா் சுத்திகரிப்பு முறைகள் உள்ளிட்ட விவரங்களை ஆணையா் ரா.மகேஸ்வரி, பொறியாளா்களிடம் கேட்டறிந்தாா்.
இதையடுத்து அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் அரசின் திட்டப் பணிகளை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். மக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.