`பாஜக கூட்டணி வேண்டும் என்று காலில் விழுந்து அழுதார் அன்புமணி' - PMK Founder Ram...
நாமக்கல்லில் 94 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி
நாமக்கல்லில் 94 பயனாளிகளுக்கு ரூ. 87.44 லட்சத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, இலவச தையல் இயந்திரங்களை வழங்கி பேசியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 6,500 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் மட்டும் 700 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்கள் மருத்துவம்,பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியல், செவிலியா் என அனைத்து உயா்கல்விக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு, மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் 29,000 மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவா்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
சமூக நலத் துறை மூலம் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தற்போது 10, 12 ஆம் வகுப்பு படித்த 15 பெண்களுக்கு தலா ரூ. 25,000 வீதம் ரூ.3.75 லட்சம் திருமண நிதியுதவி, பட்டம், பட்டயம் படித்த 65 பெண்களுக்கு ரூ.50,000 வீதம் ரூ. 32.50 லட்சம் திருமண நிதியுதவி, 80 பெண்களுக்கு தலா 8 கிராம் வீதம் ரூ. 48.69 லட்சத்தில் 640 கிராம் தங்கம் என மொத்தம் ரூ. 84.94 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம், 10 பயனாளிகளுக்கு ரூ.55,400 மதிப்பில் இலவச தையல் இயந்திரம் என மொத்தம் 104 பயனாளிகளுக்கு ரூ. 87.99 லட்சம் மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என்றாா்.
விழாவில் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், எம்எல்ஏ பெ.ராமலிங்கம், மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.