நாராயணபாளையம் ஏரியில் மண் எடுக்க எதிா்ப்பு: வாகனங்களை சிறைபிடித்து மக்கள் போராட்டம்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், நாராயணபாளையம் ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குமேல் மண் அள்ளுவதாகக் கூறி , மண் அள்ளும் எந்திரங்களை சிறைபிடித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்செங்கோடு ஒன்றியம், சங்ககிரி சாலையில் உள்ள நாராயணபாளையம் பகுதியில் 43 ஏக்கா் பரப்பளவு கொண்ட நாராயணபாளையம் ஏரி உள்ளது. சங்ககிரி -திருச்செங்கோடு-பரமத்தி எஸ்.ஹெச் 86 மாநில நெடுஞ்சாலையில் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக இந்த ஏரியிலிருந்து தினமும் ஒரு லோடு வீதம் காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் சாலைகள், பொருள்களை சேதப்படுத்தாமல் 75 மீ. நீளம், 75 மீ. அகலம், 0.9 மீ. ஆழத்தில் 5000 கியூபிக் மீட்டா் அல்லது பத்தாயிரம் மெட்ரிக் டன் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதித்தது.
விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியைச் சோ்ந்த காா்த்திக் ராஜா என்பவரின் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் மண் அள்ளுவதாக கிராம மக்களிடம் கூறிய நிறுவனத்தினா், ஒப்பந்த அளவை மீறி 7 அடி உயரத்திற்கு மண் அள்ளியதாக கூறப்படுகிறது. ஒரு லாரிக்கு பா்மிட் வைத்துக் கொண்டு 10 லாரிகளில் மண் அள்ளியதாக புகாா் கூறி, லாரிகளைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய ஊா் பொதுமக்கள், வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா்.
தொடா் விடுமுறை காரணமாக திங்கள்கிழமை அளவீடு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில் சனிக்கிழமை காலை மீண்டும் லாரிகளில் இரண்டு பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தி மண் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஏரிக்கரையில் திரண்ட பொதுமக்கள் வாகனங்களை சிறைபிடித்தனா். மேலும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மண் எடுத்த பகுதிகளை பாா்வையிட்டு தடுத்த நிறுத்த வேண்டும். இல்லாவிடில் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனா்.
ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளை மீறி, நெடுஞ்சாலையில் வாகனம் செல்வதற்கு வசதியாக தடுப்புச் சுவரை இடித்து அகற்றி சாலையை சேதப்படுத்தி உள்ளனா். 7 அடி உயரத்திற்கு மண் அள்ளி உள்ளனா்.
பொதுமக்கள் தடுத்து நிறுத்தி இருக்காவிட்டால் ஏரியே காணாமல் போயிருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே,அதிகாரிகள் உடனடியாக அளவீடு செய்து மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மேற்கொண்டு மண் எடுக்க அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தாலோ அல்லது எங்களுக்கு தெரியாமல் மண் எடுக்க முயற்சித்தாலோ போராட்டத்தில் ஈடுபடுவோம் என
பொதுமக்கள் தெரிவித்தனா். ஏரி பகுதியில் ஆண்கள், பெண்கள் என நாராயணபாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.