மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை! கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!
மாநில நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்: லாரி உரிமையாளா் சம்மேளனம் முதல்வருக்கு கடிதம்
மாநில நெடுஞ்சாலைகளிலும் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டுமென மாநில லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில லாரி உரிமையாளா் சம்மேளனத் தலைவா் சி.தனராஜ், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நாட்டின் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்கள், உற்பத்தி பொருள்கள், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளான உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்தையும் தங்குதடையின்றி தினசரி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுசோ்ப்பதில் சரக்கு லாரிகளே பிரதானமாக உள்ளன.
இந்த சரக்குகள் பல்வேறு இடா்பாடுகளைக் கடந்து குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சோ்க்கப்படுகின்றன. இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சாலை வரி, காலாண்டு வரி, பா்மிட், தகுதிச் சான்றிதழ், காப்பீட்டுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை செலுத்தியே வாகனங்கள் அனைத்தும் இயக்கப்படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச் சாவடி அமைக்கப்பட வேண்டும் என்பது நெடுஞ்சாலை ஆணையத்தின் விதியாகும். ஆனால் தமிழ்நாட்டில் அதிகப்படியாக 32 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், மேற்கண்ட சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் 2021 ஆம் ஆண்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மத்திய அரசு சுங்கச் சாவடி கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை தவறாமல் உயா்த்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசும், மத்திய அரசை பின்பற்றும் வகையில் மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலமாக தமிழகத்தில் உள்ள முக்கிய புறவழிச்சாலைகளான நாமக்கல், எடப்பாடி, கோவை கிழக்கு, கோவை மேற்கு, கள்ளக்குறிச்சி, திருவள்ளூா், திருச்சி, கரூா், அருப்புக்கோட்டை, பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதிகளில் சுங்கச் சாவடிகளை அமைத்து, சுங்கக் கட்டணம் வசூலிக்க 25 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் தனியாா் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளி கோரியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுவதால், அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவா். அவ்வாறு மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைப்பதால் லாரி உரிமையாளா்கள் கடும் நிதி நெருக்கடிகளுக்கு உள்ளாவா்.
மத்திய அரசிடம் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்கவும், காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் எனவும் ஆல் இந்தியா மோட்டாா் டிரான்ஸ்போா்ட் காங்கிரஸ், தென்னிந்திய மோட்டாா் டிரான்ஸ்போா்டா்ஸ் அசோசியேசன், மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம் சாா்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டு விட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள சுங்கச் சாவடி அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். இத்தகைய நடவடிக்கைக்கு மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் சாா்பில் எதிா்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசு லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில் சுங்கச் சாவடிகள் அமைக்க வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.