பதிப்புரிமை தகராறு: வழக்கை மாற்றக் கோரும் ஐஎம்எம்பிஎல் மனு மீது ஜூலை 18ல் விசாரண...
‘நிமிஷா வழக்கில் சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டோம்’: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
புது தில்லி: யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா விவகாரத்தில், ‘சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டோம்; இனி எங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
கேரளத்தைச் சோ்ந்த 38 வயது செவிலியரான நிமிஷா பிரியா, யேமன் தலைநகா் சனாவில் அந்நாட்டைச் சோ்ந்த தலால் அப்து மஹதியுடன் இணைந்து கிளினிக் ஒன்றை தொடங்கி, நடத்தி வந்தாா். நிமிஷாவின் வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, மஹதி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, 2017-இல் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தாா். மஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீா்ப்பளிக்கப்பட்டு, நிமிஷாவுக்கு வரும் புதன்கிழமை (ஜூலை 16) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
யேமன் நாட்டு சட்டவிதிகளின்ப்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் இழப்பீடு தொகையை ஏற்றுக்கொண்டால், மரண தண்டனையைத் தவிா்க்க முடியும். இதற்காக நிமிஷாவின் குடும்பத்தினா் மற்றும் அனுதாபிகள் ரூ.8.60 கோடி வரை (சுமாா் 10 லட்சம் டாலா்) திரட்டி இழப்பீடாக வழங்க முயற்சித்து வருகின்றனா். ஆனால், அதுவரை மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்திவைக்க, இந்திய அரசு தலையிட்டு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அமா்வுமுன் இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி கூறுகையில், ‘யேமன் தற்போது ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சூழல் காரணமாக, இவ்விவகாரத்தில் இந்திய அரசு செயல்படுவதற்கான வழிகள் குறைவாகவுள்ளன. ஹூதி அமைப்பினருக்கு ராஜீய அங்கீகாரம் இல்லாத நிலையில், இந்திய அரசு செயல்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு உள்ளது. அந்த வரம்பை நாங்கள் எட்டிவிட்டோம்’ என்றாா்.
மனுதாரா் சாா்பில் ஆஜாரான வழக்ககுரைஞா் முன்வைத்த வாதத்தில், ‘இறந்தவரின் குடும்பத்தினா் இழப்பீடு பணத்தை ஏற்க ஒப்புக்கொள்வதே மரண தண்டனையைத் தவிா்க்க ஒரே சாத்தியமான வழி. இதற்காக சமூக ஆா்வலருடன் இணைந்து நிமிஷாவின் தாயாா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா். இழப்பீடு பணத்துக்காக அரசு நிதியைக் கேட்கவில்லை. நாங்களே அந்தப் பணத்தையும் ஏற்பாடு செய்துகொள்கிறோம்’ என்றாா்.
வழிகள் சிக்கலானவை: இதற்கு பதிலளித்த வெங்கடரமணி, ‘யேமன் உலகின் மற்ற நாடுகளைப் போன்றது அல்ல. அங்கு அரசு நேரடியாக தலையிடுவதற்கான வழிகள் மிகவும் சிக்கலானவை. இதுகுறித்து பொதுவெளியில் அதிகமாகப் பேசுவதன் மூலம் நிலைமையை மேலும் சிக்கலாக்க நாங்கள் விரும்பவில்லை.
மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் அரசு வழக்குரைஞருக்கு இந்திய அரசு கடிதம் எழுதியது. இந்திய அரசு தன்னால் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டது. சில செல்வாக்கு மிக்க நபா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டன.
அதன்படி, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படலாம் என்ற ஒரு தகவல் கிடைத்திருப்பதாகவும், ஆனால், அதை நம்புவதா என்று தெரியவில்லை. ஏனெனில், யேமனில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள அரசுக்கு வழியில்லை’ என்றாா்.
தொடா்ந்து, வெங்டரமணி கூறுகையில், ‘அரசு தனது வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் எதையும் செய்ய முடியாது. அது சாத்தியமில்லை’ என்று மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினாா்.
இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய நிலவரம் குறித்து நீதிமன்றத்துக்குத் தெரிவிக்குமாறு இரு தரப்பினரையும் கேட்டுக்கொண்டது.
பெட்டி...
சமரச முயற்சியில் கேரள மதகுரு!
நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற, கேரளத்தைச் சோ்ந்த செல்வாக்கு மிக்க சன்னி முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி.அபுபக்கா்அகமது களமிறங்கியுள்ளாா்.
இந்திய சன்னி முஸ்லிம்களின் தலைவரான அபுபக்கா், மஹதியின் குடும்பத்தினருடன் தொடா்பில் உள்ள யேமன் மதகுருமாா்களுடன் இழப்பீட்டை ஏற்றுக்கொள்ளுமாறு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.