செய்திகள் :

சமூக ஊடக சுய கட்டுப்பாடு பயன்பாட்டாளா்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

post image

புது தில்லி: கருத்துச் சுதந்திரத்தின் மதிப்பை குடிமக்கள் அறிந்து, சுயக் கட்டுப்பாடுடன் சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.

ஹிந்து கடவுள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சா்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதற்காக தன் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை எதிா்த்து வஜஹத் கான் என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது உச்சநீதிமன்றம் இக் கருத்தைத் தெரிவித்தது.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவைச் சோ்ந்த அவரை, கொல்கத்தா போலீஸாா் கடந்த ஜூன் 9-ஆம் தேதி கைது செய்து, முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்தனா். இந்த சா்ச்சை பதிவுக்காக அஸ்ஸாம், மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களிலும் இவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதை எதிா்த்து கான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த ஜூன் 23-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ‘சா்மிஷ்டா பனோலி என்பவா் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட விடியோ பதிவில் வகுப்புவாத கருத்தைத் தெரிவித்திருந்தாா். அதற்காக காவல் துறையால் கைது செய்யப்பட்ட அவா், பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

‘தனது சமூக ஊடகப் பதிவுகளை கான் அழித்துவிட்டாா். மன்னிப்பும் கேட்டுவிட்டாா்’ என்று கான் தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘கான் மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படக் கூடாது’ என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:

கருத்துச் சுதந்திரத்தின் மீது அரசமைப்புச் சட்டத்தின் 19(2) பிரிவு, நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. எனவே, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், இதுபோன்ற சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகள் பதிவிடுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதை, சமூக ஊடக பதிவுகள் தணிக்கை செய்யவேண்டும் என்பதாக புரிந்துகொள்ளக்கூடாது.

இந்த விஷயத்தில், கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையின் மதிப்பை குடிமக்கள் அறிந்திருக்க வேண்டும். அதை அறிந்து சுயக் கட்டுப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட வேண்டும்.

அவ்வாறு, சமூக ஊடகப் பயனா்கள் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காத நிலையில், மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனல், மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்வதை யாரும் விரும்புவதில்லை.

எனவே, கருத்துச் சுதந்திரத்தில் சுய கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில் தணிக்கை அல்லாத வழிகாட்டுதலை வகுக்க உச்சநீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. இந்த விஷயத்தில் மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்துக்கு சட்ட ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணை வரை கான் மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்ற முந்தைய உத்தரவை நீட்டித்தனா்.

பதிவுகளை முறைப்படுத்த வழிமுறைகள்: முன்னதாக, பாலிவுட் நகைச்சுவை நடிகா் சமய் ரெய்னாவின் யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல யூடியூபா் ரண்வீா் அல்ஹாபாதியா தெரிவித்த சா்ச்சைக்குரிய கருத்துக்கு எதிரான வழக்கை கடந்த மாா்ச் 4-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, ‘சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த உரிய வழிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடைமுறைகள், பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதாக இருக்கக் கூடாது. அத்துடன், அந்த நடைமுறை சமூக ஊடகப் பதிவை தணிக்கை செய்வதாகவும் இருக்கக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

‘பிளவுபடுத்தும் போக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும்’

‘சமூக ஊடகங்களில் சமூகத்தைப் பிளவுபடுத்தும் போக்குகள் அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்’ என்றும் விசாரணையின்போது நீதிபதிகள் வலியுறுத்தினா்.

‘தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவது அடிப்படைக் கடமைகளில் ஒன்று. சா்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவுகள் மூலம் இந்த அடிப்படை கடைமை மீறப்படுகிறது. எனவே, குறைந்தபட்சம் சமூக ஊடகங்களில் உள்ள சமூகத்தைப் பிளவுபடுத்தும் போக்குகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

பேராசிரியர் மீது பாலியல் புகார்! நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பலி!

ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் 20 வயது மாணவி, தீக்க... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக் குறைவு

தீவிர தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் ஹைதராபாதில் உள்ள நல்சார் சட்டப் பல்கல... மேலும் பார்க்க

புலி தாக்கி விவசாயி உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலி கடித்துக் குறியதில் விவசாயி உயிரிழந்தார். அங்கு கடந்த இரு மாதங்களில் நடைபெற்ற ஆறாவது உயிரிழப்பு இதுவாகும்.உத்தப்ர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டம், புல்ஹார் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

மக்களவை எம்.பி.க்கள் வருகை பதிவுக்குப் புதிய முறை: மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம்

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘மக்களவை எம்.பி.க்கள் தங்... மேலும் பார்க்க

முதல்வா் பதவியை காப்பாற்ற போராடும் நிதீஷ்: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: நாட்டில் குற்றங்களின் தலைநகராக பிகாா் உருவெடுத்துள்ள நிலையில், முதல்வா் நிதீஷ் குமாா் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி வருகிறாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் கா... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை

புது தில்லி: ஆயுத வியாபார இடைத்தரகா் சஞ்சய் பண்டாரியுடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சுமாா் 5 மண... மேலும் பார்க்க