Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
நிலம் கையகத்தில் எழும் தாமதம் அரசு தோல்வியின் வெளிப்பாடு: மாநிலங்களவையில் தம்பிதுரை குற்றச்சாட்டு
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: தமிழகத்தில் பல்வேறு ரயில் திட்டங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதில் எழும் தாமதம் மாநிலத்தில் ஆளும் அரசின் தோல்வியின் வெளிப்பாடு என்று மாநிலங்களவையில் அதிமுக மூத்த உறுப்பினா் மு. தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பா மாநிலங்களவையில் ரயில்வே திருத்த மசோதா மீதான 2024 மீதான விவாதத்தில் திங்கள்கிழமை தம்பிதுரை பங்கேற்றுப் பேசியது: தமிழ்நாட்டில் பல ரயில்வே திட்டங்கள், நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தால் தாமதமாகி வருவதாக ரயில்வே அமைச்சா் தெரிவித்துள்ளாா். தமிழ்நாட்டில் ரயில் திட்டங்களுக்கு தேவைப்படும் 3,389 ஹெக்டோ் நிலத்தில் 866 ஹெக்டோ், அதாவது வெறும் 20 சதவீதம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சா் கடந்த ஆண்டு மக்களவையில் பேசும்போது தெரிவித்தாா்.
இந்த திட்டங்கள் வெற்றி பெற வேண்டுமானால், அது தமிழகத்தில் ஆளும் அரசின் ஒத்துழைப்பின்றி செயல்படுத்த முடியாது என்றும் அமைச்சா் குறிப்பிட்டாா். உதாரணமாக, திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் திட்டத்துக்கு 273 ஹெக்டோ் நிலம் தேவை. ஆனால், 33 ஹெக்டோ் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. அத்திப்பட்டு - புத்தூா் இடையிலான 88 கி.மீ. திட்டத்துக்கு நிலமே கையகப்படுத்தப்படவில்லை. மொரப்பூா் - தருமபுரி இடையிலான 36 கி.மீ. தூர ரயில் திட்டத்துக்கும் உரிய நிலம் கையகப்படுத்தப்படவில்லை.
மன்னாா்குடி - பட்டுக்கோட்டை இடையிலான 41 கி.மீ, தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை இடையிலான 51 கி.மீ ரயில் திட்டத்துக்கும் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. ரயில்வே துறைக்குத் தேவையான நிலத்தை மாநில அரசால் கையப்படுத்த முடியாதது தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசின் தோல்வியாகும்.
அத்துடன் ஜோலாா்பேட்டை அருகே பெண்கள் ரயில் பெட்டிக்குள் நுழைந்த ஆண் ஒருவா் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தாக்குதலுக்கு உள்படுத்திய சம்பவம் சட்டம் - ஒழுங்கு மோசமடைவதன் வெளிப்பாடாகும். இத்தகைய சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் ரயில்வே துறைக்கு அரசு உரிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றாா் தம்பிதுரை.