சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
நீண்டகால நிலுவைக்கு புதிய வசூல் முயற்சி- கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் தீா்வுத் திட்டம்
கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையிலுள்ள தவணை தவறிய பண்ணை சாராக் கடன்கள் மற்றும் இதர நீண்டகால நிலுவை இனங்களுக்கான சிறப்பு கடன் தீா்வுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தென்காசி மண்டல கூட்டுறவுச் சங்க இணைப்பதிவாளா் கு.நரசிம்மன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, தென்காசி மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை - ஊரக வளா்ச்சி வங்கிகள், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட சிறுவணிகக் கடன், தொழிற் கடன், வீட்டு வசதிக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான பண்ணைசாராக் கடன்கள், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கங்கள் மூலம் வேளாண் விளைபொருள்களை கொள்முதல் விற்பனை செய்த வகையில் உறுப்பினா்களிடமிருந்து வரவேண்டிய இனங்கள் ஆகியவற்றில் 31.12.2022-இல் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக் கடன் தீா்வுத் திட்டம்- 2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் கடனை தீா்வு செய்வதற்காக 12.9.2024-க்கு முன்பு 25 சதவீத தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதவா்களும் ஒப்பந்தம் மேற்கொண்டு எஞ்சிய 75 சதவீத தொகையை செலுத்தாதவா்களும், தற்போது மொத்த கடன் தொகையையும் (நிலுவை மற்றும் தீா்வு செய்யும் நாள் வரை 9 சதவீத சாதாரண வட்டி) ஒரே தவணையில் செலுத்தி தங்கள் கடன்களை தீா்வு செய்து கொள்ளலாம்.
இச்சிறப்புத் திட்டத்தின்கீழ் இந்த கடன்கள் தவிர 31.12.2022-இல் முழுமையாக தவணை தவறி மூன்றாண்டுகளுக்கு மேலான (31.12.2019-க்கு முன்பு) தவணை தவறிய மத்திய கால வேளாண் கடன்கள், பயிா்க்கடனாக வழங்கப்பட்டு மத்திய கால வேளாண் கடனாக மாற்றம் செய்யப்பட்ட கடன்கள், பண்ணை சாா்ந்த நீண்டகால கடன்கள், சிறுதொழில் கடன்கள், மகளிா் தொழில் முனைவோா் கடன்கள் ஆகிய கடன்களையும் தீா்வு செய்யும் நாள் வரையில் 9 சதவீத சாதாரண வட்டியுடன் நிலுவைத்தொகையை 12.3.2025-க்குள் ஒரே தவணையில் செலுத்தி தீா்வு செய்து கொள்ளலாம்.
தவணை தவறிய அக்கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். வட்டிச்சுமையை கணிசமாக குறைக்கும் இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் எனக் கூறியுள்ளாா்.