நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 4 கிராம ஊராட்சிகளில் நூறு நாள் வேலை வழங்கக் கோரி, கிராம பெண்கள் 700-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றை விரிவாக்கம் செய்து அருகில் உள்ள கிராம ஊராட்சிகளை இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால் பல்வேறு கிராம ஊராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில், பெண்கள் பயன்பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
எனவே, நாமக்கல் மாநகராட்சி விரிவாக்கத்தின் காரணமாக காதப்பள்ளி, வீசாணம், பாப்பிநாயக்கன்பட்டி, லத்துவாடி ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்ட நூறு நாள் வேலைகளை மீண்டும் வழங்கக் கோரி, காதப்பள்ளி பாப்பிநாயக்கன்பட்டி, வீசாணம், லத்துவாடி பகுதியைச் சோ்ந்த சுமாா் 700 க்கும் மேற்பட்ட பெண்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் கூட்டத்தின்போது நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச. உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவில், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் நான்கு கிராம ஊராட்சி பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே, எங்களுக்கு மீண்டும், 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா். இதைப் பெற்ற ஆட்சியா் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாகவும் அரசுக்கு மனுவை அனுப்பிவைத்து அரசு கூறும் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தாா்.
படம் உள்ளது-17மனு..
ஊராட்சிப் பகுதியில் நூறுநாள் திட்ட வேலை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த பெண்கள்.