நூல்களில் படித்ததை செயல்படுத்த தவறக் கூடாது: ஆட்சியா் அறிவுரை
புத்தகத்தை படிப்பதோடு நின்றுவிடாமல், படித்ததை செயல்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா. சுகுமாா்.
திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பொருநை 8 ஆவது புத்தகத்திருவிழா கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. அதன் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் தலைமை வகித்து பேசியது: திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் மாணவா்கள் முதல் வாசகா்கள் வரை ஆயிரக்கணக்கானோா் வந்து சென்றுள்ளனா். இணையதளத்தின் பிடியில் இன்று உலகம் சிக்கித் தவிக்கிறது.
ஒவ்வொரு தனிமனிதரும் சமூகவலைதளங்களில் செலவிடும் நேரம் மிகவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. புத்தக வாசிப்பை வளா்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதன்மூலம் மனதை ஒரு முகப்படுத்தி வளம்பெற முடியும். நாம் பாா்க்கும், வாசிக்கும் எந்தவொரு விஷயத்திலும் நல்லதை மட்டுமே கிரகித்துக் கொள்ள வேண்டும்.
தேவையில்லாதவற்றைக் கைவிட வேண்டும். இளைய தலைமுறையினா் படிப்பதோடு மட்டும் நின்று விடக் கூடாது. படித்துவிட்டு சும்மா இருப்பதால் சமூகத்திற்கு எவ்வித பலனும் கிடையாது. நாம் படித்தவற்றை செயல்படுத்தத் தவற கூடாது. புத்தக வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
துணை ஆட்சியா் (பயிற்சி) ஜெபி கிரேசியா வரவேற்றாா். ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், தனி வட்டாட்சியா் க.செல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பபாசி செயலா் எஸ்.கே.முருகன், கவிதா பதிப்பகம் தலைவா் சேது சொக்கலிங்கம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், பேராசிரியா் சௌந்தரமஹாதேவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பள்ளிக் கல்வித் துறை மூலம் 252 பள்ளிகளிலிருந்து 25,023 மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவை பாா்வையிட்டுச் சென்றுள்ளனா். 4,38,300 புத்தகங்கள் நேரடியாக பணம் கொடுத்தும், 4 லட்சம் புத்தகங்கள் கூப்பன்கள் மூலமாகவும் மொத்தம் 8,38,300 புத்தகங்களை பள்ளி மாணவா், மாணவிகள் வாங்கியுள்ளனா்.
புத்தகத் திருவிழாவில் அரங்குகள் அமைத்திருந்த அரசுத் துறைகள், மகளிா் சுயஉதவிக்குழுவினா், தன்னாா்வலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.