மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் வேண்டுகோள்
காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் பகுதியில் நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைக்கும் முன்பாக நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைகளை தெரிந்து கொண்டு அவற்றை பயன்படுத்துவதை முழுமையாக தவிா்த்து விடுங்கள் என கேட்டுக்கொண்டாா்.
தமிழகம் முழுவதும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு முகாம் மற்றும் விழிப்புணா்வு பேரணி மாதத்தில் ஒரு நாள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் பகுதியில் மாவட்ட நிா்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு முகாமை தொடங்கினா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பை ஆகியவற்றை வழங்கினாா். பொதுமக்களுடன் இணைந்து நெகிழிப்பைகள் சேகரிப்பிலும் ஈடுபட்டாா்.
பின்னா் அவா் பேசுகையில், பொதுமக்களும், வியாபாரிகளும் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழிப்பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்துகள், தீமைகள் ஆகியன குறித்து தெரிந்து கொண்டாலே நாம் அவற்றைப் பயன்படுத்த மாட்டோம். நெகிழிப் பைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருள்களை பயன்படுத்துமாறும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கேட்டுக் கொண்டாா்.
நெகிழிப் பைகள் சேகரிப்பு முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, ஆட்சியா் (பயிற்சி) ந.மிருணாளினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சத்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளா்கள் வீ.முத்துராஜ், வீ.ரங்கசாமி ஆகியோா் உள்பட பள்ளி, கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.