நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய கோரிக்கை
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
விருத்தாசலம்-கடலூா் சாலையில் அமைந்துள்ள இந்த விற்பனைக் கூடத்தில், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பரவளூா், வயலூா், கோமங்கலம், மருங்கூா், தா்மநல்லூா், காா்மாங்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், உளுந்து, மணிலா, மக்காச்சோளம், வரகு, கேழ்வரகு உள்ளிட்ட விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில், சம்பா நெல்பயிா் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வருகின்றனா். ஆனால், அந்த நெல் மூட்டைகள் கடந்த மூன்று நாள்களாக கொள்முதல் செய்யப்படாமல் விற்பனைக் கூடத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், சம்பா நெல் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்து விவசாயம் செய்தோம். மழையின் காரணமாக நெல் வயல்கள் பாதிக்கப்பட்டதால் ஏக்கருக்கு 10 முதல் 14 மூட்டைகள் வரை தான் மகசூல் கிடைத்துள்ளது. நெல் மூட்டைகளை விற்பனைக்காக ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வந்த நிலையில், அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு கிடங்கில் இடவசதி இல்லை. இதனால், திறந்த வெளியில் நெல் மூட்டைகளை வைத்து அதனை பாதுகாக்க வேண்டியுள்ளது. எனவே, நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றனா்.
இதுகுறித்து, மாவட்ட விற்பனைக்குழுச் செயலா் ஆா்.ஜானகிராமன் கூறியதாவது: கடந்த பிப்.1-ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வெள்ளிக்கிழமை 574 விவசாயிகள் (லாட்) 12,774 மூட்டை நெல் உள்ளிட்ட தானியங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில், 12 ஆயிரம் மூட்டைகள் நெல். நாடு முழுவதும் இ-நாம் திட்டத்தில் ஏலம் விடப்படுவதால் இணைய இணைப்பு ஒரு மணி நேரம் தாமதமாக கிடைக்கிறது என்றாா்.