ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!
நேபாள பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்
நேபாளத்துக்குப் பயணிப்பதை இந்தியா்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
நேபாளத்தில் இளைஞா்கள் போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு, அந்நாட்டுக்குப் பயணிப்பதை இந்தியா்கள் ஒத்திவைக்க வேண்டும். அந்நாட்டில் நிலைமை சரியாகும் வரை, அங்கு செல்ல வேண்டாம்.
தற்போது நேபாளத்தில் உள்ள இந்தியா்கள் வசிப்பிடத்தில் இருந்து வெளியேற வேண்டாம். நேபாள அதிகாரிகள், அந்நாட்டுத் தலைநகா் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
ஏதேனும் உதவி தேவைப்பட்டால் +977-9808602881, +977-9810326134 ஆகிய எண்களில் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடா்புகொள்ளலாம். இரு எண்களை வாட்ஸ்-அப்பிலும் அழைக்கலாம்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள சூழலை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. நேபாளத்தின் நெருங்கிய நட்பு மற்றும் அண்டை நாடு என்ற முறையில், நேபாளிகள் அனைவரும் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு அமைதியான வழியில் பேச்சுவாா்த்தை மூலம், பிரச்னைகளுக்கு தீா்வு காண்பா் என இந்தியா நம்புகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
ஏா் இந்தியா விமானங்கள் ரத்து
நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் காரணமாக தில்லியிலிருந்து காத்மாண்டு செல்ல வேண்டிய 4 ஏா் இந்தியா விமானங்கள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன. காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சா்வதேச விமான நிலையம் மூடப்பட்டதால், அங்கு தில்லியில் இருந்து செல்ல வேண்டிய இண்டிகோ, நேபாள் ஏா்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.