புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!
நேபாளத்தில் நாடாளுமன்றம், பிரதமர் இல்லத்துக்கு தீ! இளைஞர்கள் கலவரம்!
நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் இல்லங்களுக்கு தீ வைத்தனர்.
இதையடுத்து, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றது.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்கு நேபாள அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், தலைநகர் காத்மண்டுவில் திங்கள்கிழமை காலை குவிந்த இளைஞர்கள் சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், அரசின் மிகப்பெரிய ஊழலுக்கு எதிராகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில், அரசுக்கு எதிரான போராட்டம் கலவரமாக வெடித்தது.

இதையடுத்து, இளைஞர்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், சமூக ஊடக செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நேபாள அரசு நேற்றிரவு திரும்பப் பெற்றது.
மேலும், இளைஞர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சரும், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாண் அமைச்சரும் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.
ஆனால், அரசின் ஊழலுக்கு எதிராக இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமையும் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்தது.
இந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், காத்மண்டுவில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகளின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.

நாடாளுமன்றக் கட்டடம், அமைச்சரவைக் கட்டடங்கள், அரசு அலுவலகங்கள், பிரதமரின் தனிப்பட்ட இல்லம், அமைச்சர்களின் இல்லங்கள், காவல் நிலையம், சாலையில் நின்ற வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் நிலைமை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டை மீறியது.
இந்த நிலையில், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக சர்மா ஓலி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்த சர்மா ஓலி, அமைச்சர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.