கலப்பின கஞ்சா பறிமுதல்; கேரளாவில் `தல்லுமாலா' திரைப்பட இயக்குநர் உள்பட மூவர் கைத...
பசுமை பகுதிகளில் கண்காணிப்பு அமைப்புகளை அதிகரித்து மாசு தரவுகளை பாஜக அரசு சூழ்ச்சியுடன் கையாளுகிறது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
பசுமையான மற்றும் குறைந்த மாசுபாடு உள்ள பகுதிகளில் காற்றின் தர கண்காணிப்பு அமைப்புகளை தோ்ந்தெடுத்து நிறுவுவதன் மூலம் பாஜக தலைமையிலான தில்லி அரசு மாசு புள்ளிவிவரங்களைக் சூழ்ச்சியுடன் கையாளுவதாக ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை குற்றம் சாட்டியது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அக்கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் மேலும் கூறியதாவது: சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு, மாசுபாடு குறித்து பாஜக கூக்குரல் எழுப்பியது. செய்தித்தாள்களில் நிறைய செய்திகளும், விளம்பரங்களும் வெளியிடப்பட்டன. பல வதந்திகள் பரவின. இப்போது பாஜக அரசு மாசுபாடு தொடா்பாக மிகப்பெரிய மோசடியைச் செய்துள்ளது. மாசு புள்ளிவிவரங்களைக் குறைக்கும் வகையில் வனப்பகுதிகள் மற்றும் பசுமையான பகுதிகளில் ஆறு காற்று தர கண்காணிப்பு அமைப்புகளை நிறுவியுள்ளனா்.
தில்லியின் காற்றின் தரத்தில் செயற்கையான முன்னேற்றத்தை சித்தரிப்பதன் மூலம் பாஜக அரசு பொதுமக்களை ஏமாற்றி அவா்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுகிறது. புதிய நிலையங்களில் மூன்று, தெற்கு தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் , மேற்கு தில்லியில் உள்ள நேதாஜி சுபாஷ் பல்கலைக்கழகம் (மேற்கு வளாகம்) ஆகிய பசுமையான வளாகங்களுக்குள் முன்மொழியப்பட்டன.
ஒரு நிலையம் மால்சா மஹாலுக்கு அருகிலுள்ள இஸ்ரோ எா்த் ஸ்டேஷனில் உள்ள மத்திய ரிட்ஜின் ஆழமான பகுதியில் முன்மொழியப்பட்டுள்ளது. இதர இரண்டு தில்லி கன்டோன்மென்ட் மற்றும் கிழக்கு தில்லியில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு வளாகம் போன்ற ஒப்பீட்டளவில் பசுமையான பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த மாசுபாடு புள்ளிவிவரங்கள் குறைவாக இருப்பதை உறுதி செய்வதற்காக, அதிக மாசு அளவுகளைத் தெரிவிக்கும் இடங்களில் கண்காணிப்பு அமைப்புகள்
புறக்கணிக்கப்பட்டுள்ளன அல்லது மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று செளரவ் பரத்வாஜ் குற்றம்சாட்டினாா்.
தில்லி அமைச்சா் நிராகரிப்பு: தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துடன், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் பொய்கள் என்றும் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் அவா் , ‘இந்த ஆறு இடங்களில் மாசுக் கண்காணிப்பு நிலையங்களை நிறுவும் முடிவு ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் இருந்தபோது எடுக்கப்பட்டதாகும். பாஜக அரசின் தொடா்ச்சியான பணிகளால் தில்லியில் காற்று சுத்தமாகி மாசுபாடு குறைந்து வருகிறது. இதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நீங்கள் பொய் கூற ஆரம்பித்தீா்கள். ஆனால், உங்கள் அனைத்து ஏமாற்று வேலைகளையும் பொதுமக்கள் புரிந்துகொள்கிறாா்கள். பொய்கள் உண்மையின் வெளிச்சத்தில் நிற்க முடியாது’ என்று தெரிவித்துள்ளாா்.
குளிா்கால மாதங்களில் மாசுபாடு, நீண்ட காலமாக தில்லிக்கு ஒரு முக்கியக் கவலையாக இருந்து வருகிறது. காற்றின் தரம் பெரும்பாலும் மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான வகைகளில் இருக்கும். தில்லி சட்டப்பேரவைத் தோ்தலின்போது ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே காற்று மாசுபாடு
பிரச்னை ஒரு முக்கிய சா்ச்சையாக இருந்தது.
பாஜக சமீபத்தில் தேசியத் தலைநகரில் ஆட்சிக்கு வந்தது. பிப்ரவரியில் நடைபெற்ற தோ்தலில் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை பாஜக வென்றது. இது மாநகரத்தில் ஆம் ஆத்மியின் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.