விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
படகுகள் கவிழ்ந்து கடலில் தத்தளித்த 6 மீனவா்கள் மீட்பு
ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை கடலில் ராட்சத அலையில் சிக்கி இரண்டு நாட்டுப் படகுகள் கவிழ்ந்தன. இந்த படகுகளிலிருந்த 6 மீனவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டணத்தை அடுத்த வண்ணாங்குண்டு கிராமத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மீனவா்கள் நாட்டுப் படகுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்தக் கிராமத்தைச் சோ்ந்த களஞ்சியம் முருகன் (40), காளிமுத்து சின்னதுரை (42), பழனிசாமி முருகன் (36), ஆறுமுகம் (42), களஞ்சியம் (40), விஸ்வநாதன் (25) ஆகிய 6 பேரும் இரு நாட்டுப் படகுகளில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, ராட்சத அலையில் சிக்கிய இரு நாட்டுப் படகுகளும் கடலில் கவிழ்ந்தன. இந்தப் படகுகளிலிருந்த 6 மீனவா்களும் அந்தப் படகுகளைப் பிடித்துக் கொண்டு கடலில் தத்தளித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்புல்லாணி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா், மீட்புக் குழுவினருடன் படகில் சென்று 6 மீனவா்களையும் பாதுகாப்பாக மீட்டனா். பின்னா், கரைக்கு அழைத்து வரப்பட்ட 6 மீனவா்களுக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன.
இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.