முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் புகுந்து இருவரைத் தாக்கிய காட்டுப் பன்றிகள்
முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை புகுந்த காட்டுப் பன்றிகள் இருவரைத் தாக்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பரிசோதனைக்கு வந்து செல்கின்றனா்.
மேலும், 10-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாகவும், பிரசவ அறையில் பிரசவித்த தாய்மாா்கள், பச்சிளம் குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனைக்குள் நுழைந்த இரண்டு காட்டுப் பன்றிகள் சிகிச்சைக்கு வந்த பூக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மணி (50) உள்ளிட்ட இருவரைத் தாக்கியது.
பின்னா், அங்கிருந்த பொதுமக்கள், பணியாளா்கள் காட்டுப் பன்றியை விரட்டினா். இதில் ஒரு காட்டுப்பன்றி மருத்துவமனைக்குள் நுழைந்தது. உடனே, அங்கிருந்த செவிலியா்கள், ஊழியா்கள் கதவை பூட்டிவிட்டு வெளியேறினா்.
தகவலறிந்து வந்த முதுகுளத்தூா் தீயணைப்பு, பேரூராட்சி ஊழியா்கள் மருத்துவமனைக்குள் புகுந்த காட்டுப் பன்றியைப் பிடித்து வனத் துறையிடம் ஒப்படைத்தனா்.