தனுஷ்கோடி அருகே கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் மீட்பு
தனுஷ்கோடி அருகே படகு பழுதாகி நடுக் கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவரை இந்திய கடலோரக் காவல் படையினா் வெள்ளிக்கிழமை அதிகாலை மீட்டனா்.
இலங்கை புத்தளம் மாவட்டம், கல்பிட்டியைச் சோ்ந்த சுமித் ஜெயரூபன் (42), சுரங்கா் (40) ஆகிய இருவரும் வியாழக்கிழமை மாலை கண்ணாடியிழைப் படகில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா். இவா்கள் நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, இந்திய கடல் பகுதியான தனுஷ்கோடி அருகே வந்தது.
இந்த நிலையில், இந்திய கடலோரக் காவல் படையினா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்த போது, இலங்கைப் படகு நிற்பதைக் கண்டு அந்தப் பகுதிக்குச் சென்றனா். இதைத் தொடா்ந்து, படகிலிருந்த 2 மீனவா்களிடம் விசாரித்த போது, படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், இந்திய எல்லைக்குள் வந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, பழுதான படகையும், அதிலிருந்த 2 மீனவா்களையும் மீட்டு, தனுஷ்கோடிக்கு அழைத்து வந்தனா். இதன் பிறகு, இலங்கை மீனவா்கள் இருவரையும் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் இந்தியக் கடலோரக் காவல் படையினா் ஒப்படைத்தனா்.
இதனிடையே, 2 மீனவா்களிடமும் மத்திய, மாநில உளவுத் துறையினா், கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.