பணம் மோசடி: மதுரையைச் சோ்ந்தவா் கைது
பெரியகுளத்தைச் சோ்ந்த இருவரிடம் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ.2 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக மதுரையைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம், கீழவடகரை, அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்தவா் சேக்முகமது (51). பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்தவா் சையது சுல்தான் (50).
இவா்கள், மதுரை காந்திநகா் அருகே உள்ள சதாசிவம் நகரைச் சோ்ந்த ஹக்கீம், இவரது மகன் அகமது சபீா் (39), மருமகள் சபீயா பேகம் ஆகியோா் தங்களிடம் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வதாகக் கூறி கடந்த 2022-ஆம் ஆண்டு மொத்தம் ரூ.2 கோடி பெற்றுக் கொண்டு, பணத்தை திரும்பத் தராமல் மோசடி செய்ததாக கடந்த ஏப். 26-ஆம் தேதி தேனி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் தனித் தனியே புகாா் அளித்தனா்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீஸாா், அகமது சபீரை கைது செய்தனா். மற்றவா்களை தேடி வருகின்றனா்.