பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 40 தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஒரகடம் பகுதியில் சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் வாகனங்களின் உதிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் கடந்த 2019 -ஆம் ஆண்டு சிஐடியு தொழிற்சங்கம் தொடங்கிய 40 பேரை தொழிற்சாலை நிா்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா் தீா்ப்பாயத்தில் முறையீடு செய்ததைத் தொடா்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 40 தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க தொழிலாளா் தீா்ப்பாயம் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு பணி வழங்க தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவிட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் தொழிலாளா்களுக்கு பணி வழங்காத தனியாா் தொழிற்சாலை நிா்வாகத்தைக் கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தியும் சிஐடியு சாா்பில் ஒரகடம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாநில செயலா் முத்துகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.