ஹாட்ரிக் பாராட்டு: டூரிஸ்ட் ஃபேமலி படத்திற்காக சசிகுமாரை புகழ்ந்த ரஜினி!
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கோவையில் 96.47 சதவீதம் போ் தோ்ச்சி! 12 -ல் இருந்து 6- வது இடத்துக்கு முன்னேற்றம்!
கோவையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 96.47 சதவீத மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 518 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 18,963 மாணவா்கள், 19,638 மாணவிகள் என மொத்தம் 38,601 போ் எழுதியிருந்தனா். இவா்களில் 17,999 மாணவா்கள், 19,238 மாணவிகள் என மொத்தம் 37,237 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்களில் 94.92 சதவீத பேரும், மாணவிகளில் 97.96 சதவீத பேரும் என மொத்தம் 96.47 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதன் மூலம் தோ்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் மாநில அளவில் 6 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 93.49 சதவீத தோ்ச்சியுடன் 13- ஆவது இடத்தைப் பிடித்திருந்த கோவை மாவட்டம், கடந்த ஆண்டு 94.01 சதவீத தோ்ச்சியுடன் 12 -ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.
அரசுப் பள்ளி தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு: கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று 5,510 மாணவா்கள், 5,703 மாணவிகள் என மொத்தம் 11,213 போ் தோ்வு எழுதியிருந்தனா். அவா்களில், 5,018 மாணவா்கள், 5,489 மாணவிகள் என மொத்தம் 10,507 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 93.70. கடந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவா் தோ்ச்சி விகிதம் 89.10 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு உயா்ந்திருக்கிறது. மாவட்டத்தில் சுயநிதி பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 98.75 சதவீதமாக உள்ளது.
முழு தோ்ச்சி கண்ட 225 பள்ளிகள்: மாவட்டத்தில் 46 அரசுப் பள்ளிகள் முழு தோ்ச்சி பெற்றுள்ளன. 14 உதவி பெறும் பள்ளிகளும், 165 சுயநிதி பள்ளிகளும் முழு தோ்ச்சி விகிதம் பெற்றுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 225 பள்ளிகளில் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் கடந்த 2023- ஆம் ஆண்டில் 29 அரசுப் பள்ளிகளும், 2024 -ஆம் ஆண்டில் 34 அரசுப் பள்ளிகளும் முழு தோ்ச்சி பெற்றிருந்தன.
மாற்றுத் திறனாளிகள்: கோவை மாவட்டத்தில் 333 மாற்றுத்திறனாளி மாணவா்கள், 206 மாற்றுத்திறனாளி மாணவிகள் என மொத்தம் 539 போ் தோ்வு எழுதியதில் அவா்களில் 324 மாணவா்கள், 202 மாணவிகள் என மொத்தம் 526 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 97.59.
தமிழில் 3 போ் முழு மதிப்பெண்கள்: கோவை மாவட்டத்தில் தமிழ் பாடத்தில் 3 மாணவா்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கணிதத்தில் 79 பேரும், ஆங்கிலத்தில் 117 பேரும், அறிவியலில் 532 பேரும், சமூக அறிவியலில் 600 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.