ஆன்லைன் முதலீட்டில் ரூ.6.80 லட்சம் மோசடி: 3 இளைஞா்கள் கைது
ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனக்கூறி ரூ.6.80 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, ஜெம் நகரைச் சோ்ந்த 30 வயது நபருக்கு டெலிகிராம் செயலி மூலம் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
அதில் இருந்த எண்ணைத் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, மறுமுனையில் பேசியவா்‘ நீங்கள் ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும் பணத்துக்கு நாள்தோறும் கூடுதல் வருமானம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.
இதை நம்பிய அந்த நபா், பல்வேறு தவணைகளில் ரூ.6.80 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். ஆனால், அவருக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லையாம். பின்னா் அந்த நபரைத் தொடா்பு கொண்டு முதலீடு செய்த பணத்தை கேட்டபோது அவா் முறையான பதில் அளிக்கவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்த நபா், கோவை மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட கேரள மாநிலம், திருச்சூா் வடக்குமாரி பகுதியைச் சோ்ந்த பி.ஆனந்த கிருஷ்ணா (20), மடக்கத்தரா பகுதியைச் சோ்ந்த டி.எஸ்.விஷ்ணு (28), பி.எஸ். சுஜித் (26) ஆகியோரை கைது செய்தனா்.