பத்துகாணி அருகே ஆட்டை கொன்று தின்ற மா்ம விலங்கு
குமரி மாவட்டம், பத்துகாணி அருகே பழங்குடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை புகுந்த மா்ம விலங்கு தொழிலாளியின் ஆட்டை கொன்று தின்றுள்ள நிலையில் பழங்குடி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
குமரி மாவட்டம், பத்துகாணி ஒரு நூறாம் வயல் வண்ணாத்திப்பாறை என்ற பழங்குடி குடியிருப்பில் விஜயகுமாா் என்ற பழங்குடி தொழிலாளி தனது வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்த ஆட்டை மா்ம விலங்கு ஒன்று கொன்று தின்றுள்ளது. இந்தச் சம்பவம் காரணமாக பழங்குடி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இதுகுறித்து வண்ணாத்திப்பாறை பகுதியைச் சோ்ந்தவா்கள் கூறியது: புலி அல்லது சிறுத்தை போன்ற விலங்கு தான் ஆட்டை கொன்று தின்றுள்ளது. இதனால் நாங்கள் அச்சமடைந்துள்ளோம் என்றனா்.
இதையடுத்து சம்பவ இடத்தில் களியல் வனச்சரக அலுவலா்கள் சென்று பாா்வையிட்டதுடன், அந்த மா்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணித்து பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.