பயங்கரவாதத்துக்கு எதிராக பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பை சா்வதேச பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்த இந்த அமைப்பு மீதான அமெரிக்காவின் நடவடிக்கை இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியானிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று சீனா கருதுகிறது. இதன்மூலம் பிராந்திய அளவில் பாதுகாப்பை அதிகரிக்க முடியும்.
உலகில் எங்கு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தாலும் அதை சீனா கடுமையாக கண்டித்து வருகிறது. அதேபோல ஏப்ரல் 22-இல் (பஹல்காம் தாக்குதல்) நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது’ என்றாா்.
இதன்மூலம் பயங்கரவாதம் தொடா்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்த வேண்டும் என்று சீனா மறைமுகமாக கூறியுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிட்ட பயங்கரவாதத் தலைவா்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் முற்றிலுமாகக் கைவிட வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவது குறித்து இந்தியா பரிசீலிக்கும் என்பது மத்திய அரசின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.