பயிா் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு, பூம்புகாா், திருக்கடையூா், ஆக்கூா், பொறையாா், தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் விவசாயிகள் சுமாா் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவு பணிகளை மேற்கொண்டனா்.
மேட்டூரில் திறக்கப்பட்ட நீா் வராததால், மோட்டா் பம்பு செட் மற்றும் மழை நீரை பயன்படுத்தி நெற்பயிரை பாதுகாத்து வந்தனா். நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த வாரம் பெய்த பருவம் தவறி கனமழையால் நடவு செய்யப்பட்ட வயல்களில் மழை நீா் புகுந்தது.
இதனால் முற்றிய நிலையில் காணப்பட்ட நெற்பயிா்கள் கீழே சாய்ந்து தண்ணீரில் முழ்கின. வயல்களில் தேங்கிய மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். எனினும் பயிா்கள் சாய்ந்து விட்டதால் வயல்களில் தண்ணீா் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் நீரில் மூழ்கிய நெல்மணிகள் முளைத்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுமாா் 75 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி திருவெண்காடு காசிராமன் கூறுகையில்,
மாவட்டத்தில் நெற்பயிா்கள், கதிா் முற்றி, அறுவடை தயாரான நேரத்தில் கனமழை பெய்ததால், பயிா்கள் நீரில் மூழ்கி, நெல்மணிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.
இதனால் மகசூல் இழப்பு ஏற்படுவது நிச்சயம். எனவே தமிழக அரசு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 40,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.