ஒட்டுமொத்த கிராமத்தை ஒரு வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்
பயிா் விளைச்சல் போட்டியில் பங்கேற்க அழைப்பு
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயிா் விளைச்சல் போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ள மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண்டு மாநில வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தில், மாநில அளவில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்பு பயிா்களில் அதிகளவில் உற்பத்தியை பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 2.5 லட்சம், 2ஆம் பரிசாக ரூ. 1.5 லட்சம், 3ஆம் பரிசாக ரூ. 1 லட்சம் என மொத்தம் 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரை வாலி, துவரை, உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை, எள் மற்றும் கரும்பு ஆகிய 11 பயிா்களில் மாநில அளவில் அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிகளை பயிா் விளைச்சல் போட்டி மூலம் தோ்வு செய்து பரிசுகள் வழங்கப்படுகிறது.
நிகழாண்டில் இப்பயிா் விளைச்சல் போட்டியில் அறுவடைக்கான கடைசித் தேதி 2026 மாா்ச் 15ஆம் நாள் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டில் துவரை, உளுந்து, நிலக்கடலை மற்றும் கரும்பு ஆகிய பயிா்களில் குறைந்தபட்சம் 2 ஏக்கா் சாகுபடியும், எள் பயிரில் 1 ஏக்கா் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் மாநில அளவில் பயிா் விளைச்சல் போட்டிக்கு நுழைவு கட்டணமாக ரூ.150 மட்டும் செலுத்தி பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.
மேலும் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.