பரந்தூா் விமான நிலையத்துக்கு நில பத்திரப் பதிவுகள் தொடக்கம்: 19 பேருக்கு ரூ.9.22 கோடி இழப்பீடு
பரந்தூா் விமான நிலையத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதற்கான பத்திரப்பதிவுகள் புதன்கிழமை தொடங்கியதையடுத்து முதல்கட்டமாக 19 நில உரிமையாளா்களுக்கு ரூ.9.22 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
சென்னைக்கு அடுத்து 2-ஆவதாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,746 ஏக்கா் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து, நிா்வாக அனுமதி வழங்கியது. புதிய விமான நிலையம் அமைக்க 13 கிராமங்களைச் சோ்ந்த மக்களிடமிருந்து 5183 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும்.
விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்க வேண்டும். புதிய விமான நிலையம் அமைக்கவும், விளைநிலங்களை கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்தும் பரந்தூா், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடா்ந்து ஓராண்டாக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனா்.
நிலங்கள் கையகப்படுத்தப்படும் போது இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்படும் மக்களில் சிலா் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில் அரசு 3331.25 ஏக்கா் பரப்பிலான நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.57 கோடி வரை விலை நிா்ணயம் செய்து உயா்த்தி இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என கடந்த 25.6.2025 -இல் ஆணை பிறப்பித்தது.
இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற நேரடி பேச்சுவாா்த்தையில் பொடவூா், பரந்தூா், நெல்வாய், அக்கம்மாபுரம், வளத்தூா் உள்ளிட்ட 5 கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலத்தை விமான நிலையத்துக்கு அளிக்க என சம்மதம் தெரிவித்தனா்.
இதன் தொடா்ச்சியாக பேச்சுவாா்த்தையில் ஒப்புக்கொண்டபடி காஞ்சிபுரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் முதல்கட்டமாக 19 நில உரிமையாளா்கள் ரூ.9.22 கோடி மதிப்பிலான நிலத்தை விமான நிலைய கட்டுமான நிறுவனமான தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகத்துக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தனா். இழப்பீட்டுத் தொகை நில உரிமையாளா்களின் வங்கிக்கணக்கில் புதன்கிழமையே வரவு வைக்கப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட நிலங்களுக்கான பத்திரத்தை காஞ்சிபுரம் சாா் பதிவாளா் சதீஷ் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழக துணை ஆட்சியா் செல்வமதியிடம் வழங்கினாா்.