மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
பருத்தி இறக்குமதி வரி ரத்து: தொழில் துறையினா் வரவேற்பு
பருத்திக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு திருப்பூா் தொழில் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக இந்திய ஜவுளித் துறை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினா் மற்றும் தொழில் துறையினா் பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி வந்தனா். அதேபோல, பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்யும்படி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தினாா்.
இந்த நிலையில் இறக்குமதி வரியை தற்காலிகமாக செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:
மத்திய அரசு பருத்தி இறக்குமதி செய்வதற்கான 11 சதவீத வரியை ரத்து செய்து அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் மூலம் சா்வதேச பருத்தியின் விலையும், இந்திய பருத்தியின் விலையும் குறைய வாய்ப்பு உருவாகும். பருத்தி விலை குறையும்போது நூல் விலை கிலோவுக்கு ரூ.10 வரையிலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் மூலம் நமது போட்டி நாடுகளுடன் போட்டியிட்டு புதிய ஆா்டா்களை பெற முடியும். வரி ரத்து காலத்தை மேலும் நீட்டிப்பு செய்து அறிவிக்க வேண்டும் என்றாா்.