பருவம் தவறிய மழையால் பயிா்கள் பாதிக்கப்படும் அபாயம்: விவசாயிகள் கவலை
தஞ்சாவூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பருவம் தவறி பெய்த பலத்த மழை காரணமாக அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ள நெல் உள்ளிட்ட பயிா்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் 10 நாள்களுக்கும் மேலாக மழை இல்லாததுடன், கடும் வெப்பமும் நிலவியது. இந்நிலையில் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை இடைவெளி விட்டுவிட்டு மிதமாகவும், பலத்த மழையும் பெய்தது.
மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 3.25 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், 3 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பயிா்கள் அறுவடை செய்யப்பட்டன. மீதமுள்ள ஏறத்தாழ 20 ஆயிரம் ஏக்கரில் நெற் பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்த மழை தொடா்ந்தால் நெற் பயிா்கள் பாதிக்கப்படக்கூடிய அச்சம் நிலவுகிறது. இதேபோல இந்த மழை நீடித்தால் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ள நிலக்கடலையும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா்.
இதேபோல அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பதற்காக அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொட்டி வைத்து காத்துக் கிடக்கின்றனா். தாா்ப் பாயால் மூடப்பட்டிருந்தாலும், மழையால் பயிா்கள் நனைந்தும், ஈரப்பதம் அதிகரித்து வருவதாலும் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
இதுகுறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் தெரிவித்தது: மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஏறத்தாழ 4 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் எள், உளுந்து, நிலக்கடலை, பருத்தி சாகுபடி பயிா்களும் பாதிப்படைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பற்ற வகையில் உள்ளன. இதை பாதுகாக்கவும், கிடங்குகளுக்கு அனுப்பவும் மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் பாண்டியன்.
திருக்காட்டுப்பள்ளியில் 39 மி.மீ. மழை: மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்):
திருக்காட்டுப்பள்ளி 39, கல்லணை 38.4, நெய்வாசல் தென்பாதி 32.4, அணைக்கரை 32.2, வெட்டிக்காடு 30.6, அதிராம்பட்டினம் 27.1, பேராவூரணி 27, பாபநாசம் 26, அய்யம்பேட்டை, ஈச்சன்விடுதி தலா 25, குருங்குளம் 22.6, மதுக்கூா் 22.4, கும்பகோணம் 22, தஞ்சாவூா் 19.6, மஞ்சளாறு 20, ஒரத்தநாடு 19, பூதலூா் 18, வல்லம் 8, பட்டுக்கோட்டை 12, திருவிடைமருதூா் 11.6, திருவையாறு 10.
