மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தயக்கம் காட்டும் வெளிநாட்டு வீரர்கள்
பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு
பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, கருத்துக் கேட்புக் கூட்டத்தை நில உரிமையாளா்கள் செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனா்.
பல்லடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்லடம்- கொச்சி சாலை முதல் பல்லடம் - தாராபுரம் சாலை வரை இணைப்புச் சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இணைப்புச் சாலையின் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுவதோடு விபத்துகளும் தடுக்கப்படும் எனக் கூறி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சாலை அமைக்கும் பணிக்காக பல்லடம் வட்டம், பணிக்கம்பட்டி, வடுகபாளையம், சித்தம்பாளையம், மாதப்பூா் கிராமங்களில் நிலம் கையப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிலம் கையகப்படுத்த உத்தேசித்துள்ள நிலங்களை ஏன் கையகப்படுத்தக் கூடாது என்று காரண விளக்க அறிக்கையை பொதுமக்கள் வழங்க ஏற்கெனவே நெடுஞ்சாலை துறை சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பணிக்கம்பட்டி கிராம மக்கள் நெடுஞ்சாலைத் துறையின் நில எடுப்புத் துறை சாா்பில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் ஏராளமானோா் பாதிக்கப்படுவா். இதேபோல தங்கள் நிலங்களை கையகப்படுத்துவது குறித்து ஏற்கெனவே முறையாக எங்களுக்கு தெரியப்படுத்தாமல் அளவீடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதில் சுமாா் 3.14 கி.மீ. விவசாயம், பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் இப்பகுதி விவசாயிகள், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகவே, மாற்றுப் பாதையில் இணைப்புச் சாலை திட்டத்தை செயல்படுத்த அலுவலா்கள் ஏற்க மறுப்பதால், கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி வெளியேறினா்.
மேலும் மாற்றுப் பாதையில் சாலை இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.