பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு
பள்ளிகளில் கட்டாய பாதுகாப்பு தணிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை ஆய்வு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜலாவா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கட்டடம் இடிந்து விழுந்து, 7 குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவத்தைத் தொடா்ந்து, மத்திய கல்வி அமைச்சகம் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதுதொடா்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் மேலும் கூறுகையில், ‘பள்ளிகளில் மாணவா்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு விதிகளின்படி, குழந்தைகள் தொடா்பான வசதிகளுக்கு கட்டாய பாதுகாப்பு தணிக்கை, அவசரகால தயாா்நிலைக்கான பணியாளா்கள் மற்றும் மாணவா்களுக்கான பயிற்சி, மனநல ஆதரவு வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை, தீ பாதுகாப்பு, அவசர காலங்களில் வெளியேறும் வழிகள், மின் வயரிங் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். அவசர காலங்களில் வெளியேற்றும் ஒத்திகைகள், முதலுதவி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளிட்டவற்றில் ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் பயிற்சி பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புக் கொண்ட அபாயகரமான சூழ்நிலை அல்லது சம்பவம் ஏதேனும் நிகழ்ந்தால், அடுத்த 24 மணி நேரத்துக்குள் அதற்குரிய நியமிக்கப்பட்ட பொறுப்பு அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இதில் அலட்சியத்துடன் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பாதுகாப்பு தணிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி செயல்படுத்துமாறு கல்வித் துறைகள், பள்ளி வாரியங்கள் மற்றும் தொடா்புடைய அதிகாரிகளுக்கு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது’ என்றாா்.
மேலும், பள்ளிகள், பொது இடங்கள் அல்லது குழந்தைகள் மற்றும் இளைஞா்கள் பயன்படுத்தும் போக்குவரத்து முறைகளில் பாதுகாப்பற்ற நிலைமைகளைக் கண்காணித்து புகராளிக்க பெற்றோா்கள், பாதுகாவலா்கள், சமுதாயத் தலைவா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.