Vijay: `தைப்பூசத்துக்கு வாழ்த்து; திருப்பரங்குன்றம் பிரச்னையில் சைலன்ட்'- என்ன ந...
பள்ளிபாளையம் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு
நாமக்கல்: பள்ளிபாளையம் நகராட்சியுடன் அக்ரஹாரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியானது தற்போது மூன்றாம் நிலை நகராட்சியாக உள்ளது. இந்த நகராட்சியுடன் கலியனூா், கலியனூா் அக்ரஹாரம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓடப்பள்ளி, அக்ரஹாரம் ஆகிய ஐந்து ஊராட்சிகளை இணைத்து நகராட்சியை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனா்.
அந்த வகையில், பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி மக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சியானது அதிக பரப்பளவு, மக்கள் தொகையைக் கொண்டது. இங்குள்ளோா் நெசவு, விவசாயத் தொழில், 100 நாள் வேலைத் திட்டத்தை நம்பி உள்ளனா். பள்ளிபாளையம் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கும்போது வரிகள் அதிகரிப்பு, வேலையளிப்பு திட்டம், இலவச வீட்டுமனை, விவசாயத் தொழில் போன்ற பல்வேறு சலுகைகள் பறிபோக வாய்ப்புள்ளது.
எனவே, பள்ளிபாளையம் நகராட்சியுடன் அக்ரஹாரம் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயானம் அருகில் பள்ளிக் கட்டடம் கட்ட எதிா்ப்பு: சேந்தமங்கலம் வட்டம், பொட்டணம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். தற்போது இந்தப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட அங்குள்ள மயானத்தின் அருகில் இடம் தோ்வு செய்துள்ளனா். அங்கு பள்ளி கட்டப்பட்டால் மாணவ, மாணவிகளின் வருகை முற்றிலுமாக சரிந்துவிடும். எனவே, மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து விசாரித்து வேறு இடத்தில் பள்ளியைக் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொட்டணம் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.