பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சியை உறுதிபடுத்த வேண்டும்
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தோ்ச்சியை உறுதிபடுத்த வேண்டும் என அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) வி.கற்பகம் அறிவுறுத்தினாா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளிகளில் பயின்று பொதுத்தோ்வு எழுதும் மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், ஆசிரியா்களுக்கு பயிற்சியளித்து மாணவா்களை கண்காணிக்கும் வகையில், மாவட்ட கல்வி அலுவலா், பள்ளிகளின் துணை ஆய்வாளா், வட்டார வள மைய ஆசிரியா்கள் அடங்கிய குழு ஒன்றியந்தோறும் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவா்கள் தொடா்ந்து பயில்வதை கண்காணிக்கவும், தோ்வுக்கு தயாா்படுத்தும் வகையில் உரிய பயிற்சியளிக்கவும், ஊக்கப்படுத்தவும் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சமூக அறிவியல், தமிழாசிரியா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், புதுச்சத்திரம் ஆகிய ஒன்றியங்களில் திங்கள்கிழமை ஆசிரியா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தொ.ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில், மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) வி.கற்பகம் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற சமூக அறிவியல், தமிழ் ஆசிரியா்கள் 72 பேருக்கு பொதுத் தோ்வில் அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற அறிவுரையும், வழிகாட்டலும் வழங்கப்பட்டன. இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி, வட்டார வள மைய ஆசிரியா் சென்றாயப் பெருமாள் ஆகியோா் ஆசிரியா்களுக்கு பயிற்சியளித்தனா்.
இப்பயிற்சி முகாமில் 1,330 திருக்குகளை ஒப்புவித்த மாணவிக்கும், தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.