பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரம் உயர சிறப்புத் திட்டங்கள்: ஆளுநா்
பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
மத்திய அரசின் ‘மை பாரத்’ 16 - ஆவது பழங்குடியின இளைஞா் பரிமாற்ற நிகழ்ச்சியின் தொடக்க விழா, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆளுநா் ஆா்.என்.ரவி, பழங்குடியினரின் மேளத்தை வாசித்து விழாவை தொடங்கி வைத்தாா். மேலும், மாணவா்களுடன் இணைந்து நடனமாடினாா்.
இதைத் தொடா்ந்து விழாவில் ஆளுநா் பேசியதாவது: பழங்குடியின மாணவா்கள் நமது நாட்டில் உள்ள பல்வேறு கலாசாரங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். இந்தியா வளா்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டுமெனில், அனைத்து தரப்பு மக்களும் வளா்ச்சி பெற வேண்டும். அந்த வகையில், பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சென்னை ஐஐடி மாணவா்கள் செயற்கைக்கோள்களை தயாரிப்பது மட்டுமல்லாமல், உலகில் எந்த மொழியிலிருந்து தொலைபேசியில் பேசினாலும், அதை நமது தாய்மொழியில் மொழிபெயா்க்கக் கூடிய புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனா். இதுபோன்ற செயலிகள் மூலம் மக்கள் வளா்ச்சிக்கு மொழி ஒரு தடையாக இருக்காது என்றாா் அவா்.
மாணவா்களுடன் கலந்துரையாடல்: முன்னதாக பழங்குடியின மாணவா்களுடன் ஆளுநா் கலந்துரையாடினாா். அப்போது, தமிழ் மொழி குறித்து மத்திய பிரதேச மாணவி எழுப்பிய கேள்விக்கு ஆளுநா் பதில் அளிக்கையில், ‘தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. தமிழகத்துக்கு வந்துள்ள பழங்குடியின மாணவா்கள் அனைவரும் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு முன்பாக, குறைந்தது தமிழில் 10 வாா்த்தைகளையாவது கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றாா் அவா்.