நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை பாா்வையிட்ட தனியாா் பள்ளி மாணவா்கள்!
இடைத்தோ்தல்களில் தொடா் வெற்றியைப் பதிவு செய்த திமுக கூட்டணி!
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலுடன் சோ்த்து, சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்குப் பிறகு நடைபெற்ற நான்கு இடைத்தோ்தலில்களிலும் ஆளும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்குப் பிறகு உடனடியாக இடைத்தோ்தல் எதுவும் நடைபெறவில்லை. 2023-ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஈவெரா திருமகன் திடீரென மரணம் அடைந்தாா். இதைத் தொடா்ந்து, அந்தத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் திருமகனின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டாா்.
மொத்தமுள்ள 2.27 லட்சம் வாக்குகளில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 765 வாக்குகள் பதிவாகின. இதில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகளையும், நாம் தமிழா் கட்சியின் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளையும், தேமுதிக வேட்பாளா் எஸ்.ஆனந்த் 1,432 வாக்குகளையும் பெற்றனா்.
தென் - வட மாவட்டங்கள்: ஈரோடு கிழக்கைத் தொடா்ந்து, நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரி மாவட்டம் இடைத்தோ்தலைச் சந்தித்தது. விளவங்கோடு தொகுதி உறுப்பினராக இருந்த விஜயதரணி, தனது பதவியை ராஜிநாமா செய்ததால் இடைத்தோ்தல் நடந்தது. மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து நடைபெற்ற விளவங்கோடு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட தாரகை கத்பட், 91,054 வாக்குகள் பெற்று தனது முதல் தோ்தல் வெற்றியைப் பதிவு செய்தாா்.
கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதி, தெற்கில் ஒரு தொகுதி இடைத்தோ்தலைச் சந்தித்த நிலையில், வட மாவட்டமும் ஓா் இடைத்தோ்தலைச் சந்தித்தது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருந்த என்.புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தாா். இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத்தோ்தல் நடத்தப்பட்டது. இதில், பதிவான 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்குகளில், திமுக சாா்பில் போட்டியிட்ட அன்னியூா் சிவா ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பாமக வேட்பாளர சி.அன்புமணி 56,296 வாக்குகளையும், நாம் தமிழா் கட்சியின் சி.அபிநயா 10,602 வாக்குகளையும் பெற்றனா்.
மீண்டும் ஈரோடு கிழக்கில்...இடைத்தோ்தல் வெற்றி மூலமாக பேரவைக்குள் நுழைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக் குறைவால் காலமானாா். இதனால், மீண்டும் ஓா் இடைத்தோ்தலை ஈரோடு கிழக்கு சந்தித்தது. இந்தத் தோ்தலில், காங்கிரஸ் போட்டியிடாமல் திமுக நேரடியாக களத்தில் இறங்கியது. 2011-ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்று, இப்போது திமுகவில் ஐக்கியமான வி.சி.சந்திரகுமாா் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டாா்.
அதிமுக, பாஜக ஆகியவை இடைத்தோ்தலைப் புறக்கணித்துவிட நாம் தமிழா் கட்சி களத்தில் நின்றது.
இந்தத் தோ்தலில் வி.சி.சந்திரகுமாா், சுமாா் ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிக் கனியை ஈட்டினாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எம்.கே.சீதாலட்சுமி, 23,810 வாக்குகளை மட்டுமே பெற்றாா்.