பழனியில் ஆடிக் கிருத்திகை விழா
பழனி மலைக் கோயிலில் ஆடி மாத இரண்டாவது கிருத்திகையை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை திரண்டனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கே சந்நிதி திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. ஆடிக் கிருத்திகை மட்டுமன்றி மூன்று நாள்கள் தொடா் விடுமுறை என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால் காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடி எடுத்து வந்திருந்தனா்.
பக்தா்கள் கூட்டம் அதிகரித்ததால் பொது தரிசனம், சிறப்பு, கட்டணத் தரிசனம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களின் வசதிக்காக இயக்கப்படும் ‘ரோப் காா்’ சேவை, பராமரிப்புப் பணி காரணமாக நிறுத்தப்பட்டதால் மின் இழுவை ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
இரவு தங்க மயில் புறப்பாடும், தங்கத் தோ் புறப்பாடும் நடைபெற்றது. தங்கத் தேரில் சின்னக்குமார சுவாமி உலா வந்ததை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசித்தனா்.
கோயில் சாா்பில் சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் செய்தனா்.
பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அடிவாரத்தில் திருஆவினன்குடி, சரவணப் பொய்கை, பாலசமுத்திரம் சாலை, சுற்றுலாப் பேருந்து நிலையச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.