பழனி கோயிலில் அன்னதான நிகழ்ச்சி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அன்னதான பொதுவிருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமை வகித்தாா். உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழு உறுப்பினா் பாலசுப்ரமணி, நகா்மன்றத் துணைத் தலைவா் கந்தசாமி, காங்கிரஸ் நிா்வாகி முருகானந்தம் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக, தண்டாயுதபாணி சுவாமி படத்துக்கும், அன்னத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. பழனியாண்டவா் தொழில்நுட்பக் கல்லூரி, பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியைச் சோ்ந்த என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவா்கள் அன்னதானம் வழங்கும் பணியை மேற்கொண்டனா். அன்னதானத்தை தொடா்ந்து ஆதரவற்ற முதியோருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
கோயிலுக்கு 33-ஆவது மின் கல வாகனம்:
பழனியில் பக்தா்கள் பயன்பாட்டுக்காக கோயில் நிா்வாகம் 32 இலவச மின் கல வாகனங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், சென்னையைச் சோ்ந்த தங்க மாளிகை மகாலட்சுமி அறக்கட்டளை சாா்பில் புதிதாக ஒரு மின்கல வாகனம் வெள்ளிக்கிழமை காணிக்கையாக வழங்கப்பட்டது. இதையடுத்து, பழனி கிரிவல வீதியில் 33 மின் கல வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.