ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநருக்குப் பாராட்டு
அரசுப் பேருந்தில் பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு அவா்களிடமே ஒப்படைத்த ஓட்டுநா், நடத்துநா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பொது மேலாளா் ஆ.முத்துகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதைத்தொடா்ந்து 39 பணியாளா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், பழனி கிளையிலுள்ள அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது பெண் பயணி தவறவிட்ட ரூ.60,680-யை மீட்டு, பயணியிடம் ஒப்படைத்த ஓட்டுநா் ஈஸ்வரன், நடத்துநா் சத்திய மூா்த்தி, திண்டுக்கல் 3-ஆவது கிளையிலுள்ள பேருந்தில் ரூ.4,100-யை மீட்டு, பயணியிடம் ஒப்படைத்த நடத்துநா் கோபிநாத் ஆகியோருக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இதில், ஓட்டுநா் ஈஸ்வரன் கடந்த ஆண்டு பயணி ஒருவா் தவறவிட்ட ரூ.4.50 லட்சத்தை மீட்டு சம்மந்தப்பட்டவரிடமே ஒப்படைத்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடா்ந்து போக்குவரத்து பணியாளா்களின் குழந்தைகளில் 10, 12- ஆம் வகுப்புத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 42 பேருக்கு மொத்தம் ரூ.51,500 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.