சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: கிராம சபைக் கூட்டத்தில் புகாா்
செம்பட்டி அருகேயுள்ள சீவல்சரகு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், 20 ஆண்டுகளாக குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதி இல்லை என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஊராட்சி ஒன்றியம், சீவல்சரகு ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
கூட்டத்தில் அவா் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கு தீா்வு காணவும், அரசின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனவும் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி உத்தரவிட்டாா்.
கலைஞா் கனவு இல்ல திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறன்றன. தற்போது, தமிழகம் முழுவதும் 85 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு 6,200 வீடுகளும், நிகழாண்டு 4,000 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ரூ. 300 கோடி மதிப்பில் சாலைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கடந்த வாரம் ரூ. 500 கோடி பெற்று விடுபட்ட கிராமங்களுக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளாா். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே 4 லட்சம் பேருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் போ் புதிதாக விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றாா்.
கிராம சபைக் கூட்டத்தில், சீவல்சரகு ஊராட்சிக்குள்பட்ட நெசவாளா் காலனி பொதுமக்கள், 20 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை என மனு அளித்தனா். இந்தக் கூட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டது. மேலும், எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி, மக்கும் குப்பைகளை உரமாக்கி பயன்படுத்தவேண்டுமென உறுதிமொழி எடுத்தனா்.
இதில், துணை ஆட்சியா் வினோதினி, ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன், ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், பத்மாவதி, ஆத்தூா் வருவாய் அலுவலா் ஜானகி, சீவல்சரகு ஊராட்சி மன்றச் செயலா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.