திண்டுக்கல் சுதந்திர தினவிழாவில் ரூ.2.20 கோடிக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு
நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 109 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊா்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
இந்த விழாவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவின்போது, சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினா் 133 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்களையும், வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை, மருத்துவத் துறை, நீதித் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, செய்தி மக்கள் தொடா்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 276 அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்களை ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், வருவாய்த் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மாவட்டத் தொழில் மையம், தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 109 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இந்த விழாவில், திண்டுக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, புனித வளனாா் பெண்கள் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி, வாசவி பதின்மப் பள்ளி, பட்ஸ்பிளோரசிங் பள்ளி, எம்எஸ்பி அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 292 மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு ஆட்சியா் செ.சரவணன் மாலை அணிவித்து, மாரியாதை செலுத்தினாா்.