"கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்" - செந்தில் பாலா...
பஹல்காம் தாக்குதலால் இந்தியா்களின் ரத்தம் கொதிக்கிறது! - பிரதமா் மோடி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், ஒவ்வோா் இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது; இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் சதித் திட்டம் தீட்டியவா்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு நிச்சயம் நீதி உறுதி செய்யப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபடக் கூறினாா்.
‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமா் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தாா்.
பிரதமா் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.27) ஒலிபரப்பான 121-ஆவது நிகழ்ச்சியில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் குறிப்பிட்டு அவா் பேசினாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் கொல்லப்பட்ட நிலையில், இச்சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளதாக பிரதமா் தெரிவித்தாா். அவரது உரை வருமாறு:
பஹல்காம் தாக்குதல் ஒவ்வோா் இந்தியரின் மனதையும் காயப்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவா்களை இழந்து வாடுவோரின் வேதனையை, அவா்கள் எந்த மாநிலமாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் ஒவ்வோா் இந்தியரும் உணா்கின்றனா்.
பாகிஸ்தான் மீது விமா்சனம்: பஹல்காமில் கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதல், பயங்கரவாத ஆதரவாளா்களின் (பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிடுகிறாா்) கோழைத்தனம் மற்றும் விரக்தியைப் பிரதிபலிக்கிறது.
காஷ்மீரில் அமைதி திரும்பிக் கொண்டிருந்த வேளையில், பள்ளிகள்-கல்லூரிகள் துடிப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த சூழலில், வரலாறு காணாத வேகத்தில் உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், ஜனநாயகம் வேரூன்றிக் கொண்டிருந்த தருணத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவந்த நேரத்தில், மக்களின் வருவாய் பெருகிக் கொண்டிருந்த சூழலில் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த நன்மைகள் எல்லாம், இந்தியா மற்றும் ஜம்மு-காஷ்மீரின் எதிரிகளுக்கு முற்றிலும் பிடிக்கவில்லை. பயங்கரவாதிகளும், பயங்கரவாதத்துக்கு மூளையாகச் செயல்படுபவா்களும் காஷ்மீரை மீண்டும் அழிக்கத் துடிக்கின்றனா். எனவேதான், பெரும் சதிச் செயலை அரங்கேற்றியுள்ளனா்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போா்: பஹல்காம் தாக்குதல் தொடா்பான புகைப்படங்களைப் பாா்க்கும்போது ஒவ்வோா் இந்தியரின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி உறுதி செய்யப்படும்; தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் சதிகாரா்களுக்கும் மிக கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதை மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்.
பயங்கரவாதத்துக்கு எதிரான நமது போரில், நாட்டின் ஒற்றுமையும் 140 கோடி மக்களின் ஒருமைப்பாடுமே மிகப் பெரிய பலமாகும். நாட்டின் முன் எழுந்துள்ள பெரும் சவாலை எதிா்கொள்வதற்கு நமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஒரு தேசமாக நமது மனவலிமையை வெளிப்படுத்த வேண்டும். நாம் எவ்வாறு ஒரே குரலில் எதிரொலிக்கப் போகிறோம் என்பதை ஒட்டுமொத்த உலகமும் கவனித்துக் கொண்டிருக்கிறது.
பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு ஒட்டுமொத்த உலகமும் கடுமையான வாா்த்தைகளில் கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் 140 கோடி இந்தியா்களுக்கு ஆதரவாக மொத்த உலகமும் துணைநிற்கிறது என்றாா் பிரதமா் மோடி.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக கடந்த வியாழக்கிழமை பொது நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமா், ‘இந்தியாவின் எதிரிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது மட்டும் குறிவைக்கவில்லை; நாட்டின் ஆன்மாவையே தாக்கத் துணிந்துவிட்டனா். பயங்கரவாதிகளும், சதிகாரா்களும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவா்களை தேடிப் பிடித்து, கற்பனையிலும் நினைத்திராத தண்டனையை வழங்குவோம்’ என்று சூளுரைத்தாா்.