அடுத்த 20 ஆண்டுகள் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்கும்! அமித் ஷா
பஹல்காம் தாக்குதல்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
ஜம்மு - காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
அவர்கள் மூவரும், கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ராணுவம் தரப்பில் மூன்று பேரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஜம்மு - காஷ்மீரின் டச்சிகாம் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இரண்டு நாள்களுக்கு முன்னதாக உளவுத்துறை தகவல் அளித்திருந்தது.
இதையடுத்து ஜம்மு - காஷ்மீரின் லிட்வா பகுதியில் ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் இந்திய ராணுவத்தின் சின்னர் கார்ப்ஸ் படையுடன் மாநில காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் இணைந்து தேடுதல் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை செல்பவர்கள் மீதும் பஹல்காமில் நடத்தியதை போன்று தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர்.
இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா ஏவுகணைகளை வீசி அழித்தது. பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியதால் 4 நாள் சண்டை நீடித்தது.
இதனிடையே, கடந்த மூன்று மாதங்களாக பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர்.
இன்று மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதம் நடைபெறவுள்ள நிலையில், மூன்று பயங்கரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.