பாகிஸ்தானியா்கள் வெளியேற அவகாசம் நிறைவு: அட்டாரி-வாகா எல்லை மூடல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியாவின் பதில் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாகிஸ்தானியா்கள் இந்தியாவைவிட்டு வெளியேறுவதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், ‘அட்டாரி-வாகா சா்வதேச எல்லை’ வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டது.
பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானுடனான ராஜீய உறவை துண்டித்த இந்தியா, பாகிஸ்தானியா்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டது.
மேலும், பாகிஸ்தானில் இந்தியாவுக்கான தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசக அதிகாரிகளைத் திரும்பப் பெறுவதாக இந்தியா அறிவித்தது. இதைத் தொடா்ந்து, புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவா்களின் துணை ஊழியா்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். இதற்கான அவகாசம் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான புதன்கிழமை, 125 பாகிஸ்தானியா்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறினா்.
ஏப். 24-ஆம் தேதி முதல் கடந்த 7 நாள்களில் 911 பாகிஸ்தானியா்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனா். அதேபோல், 1,617 இந்தியா்கள் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பியுள்ளனனா். இதனிடையே, பாகிஸ்தான் நுழைவு இசைவுடன் (விசா) 23 இந்தியா்கள் அந்நாட்டுக்குள்ளேயும் நீண்ட கால விசாவுடன் 224 பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்குள்ளே நுழைந்துள்ளனா்.
நீண்டகால, ராஜீய அல்லது அதிகாரபூா்வ விசா வைத்திருப்பவா்களுக்கு மட்டும் இந்தியாவிலிருந்து வெளியேறுவதற்கான உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாகிஸ்தானியா்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா சா்வதேச எல்லை வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டது.