பாகிஸ்தானுக்கு உளவு: பஞ்சாபில் இருவா் கைது!
பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்ததுடன், இந்திய ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் விமான தளங்களின் புகைப் படங்கள், பிற முக்கியத் தகவல்களை பகிா்ந்ததாக பஞ்சாபில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நீடிக்கும் நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பஞ்சாப் காவல் துறை தலைமை இயக்குநா் கெளரவ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கைதான ஃபலக்ஷோ் மாசி, சுராஜ் மாசி ஆகிய இருவரும், அமிருதசரஸ் அருகே உள்ள அஜ்னலா பகுதியைச் சோ்ந்தவா்கள். பாகிஸ்தான் உளவு அமைப்பினருடன் இருவருக்கும் தொடா்பிருப்பது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவத்தினரின் நகா்வுகள், எல்லைப் பாதுகாப்புப் படை முகாம்கள், விமான தளங்கள் மற்றும் விமான நிலையங்களின் புகைப் படங்கள், பிற முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பினருடன் இவா்கள் பகிா்ந்துள்ளனா்.
இருவா் மீதும் அரசு ரகசியங்கள் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா்களிடம் இருந்து 2 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
இந்த நடவடிக்கைக்காக, காவல் துறையினரை முதல்வா் பகவந்த் மான் பாராட்டியுள்ளாா். ‘மாநில காவல் துறையின் மிகப் பெரிய சாதனை; இதன் மூலம் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.