பாகிஸ்தானுக்கு கடன்: ஐஎம்எஃப் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடா்பாக சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்க இந்த நிதியை பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடும் என கண்டனம் தெரிவித்து இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
இதுதொடா்பாக இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஐஎம்எஃப்பில் மிகவும் பொறுப்புமிக்க உறுப்பினராக இந்தியா உள்ளது. ஐஎம்எஃப் மூலம் வழங்கப்படும் நிதியை பாகிஸ்தான் முறையாக பயன்படுத்தியதில்லை. மேலும், இந்த நிதியை பயங்கரவாத ஊக்குவிப்புக்கு பாகிஸ்தான் பயன்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது.
1989-இல் தொடங்கி தற்போது வரையிலான 35 ஆண்டுகளில் 28 ஆண்டுகள் பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதியை விடுவித்துள்ளது. கடந்த 2019-இல் இருந்து 5 ஆண்டுகளில் பாகிஸ்தானின் 4 திட்டங்களுக்கு ஐஎம்எஃப் கடன் வழங்கியுள்ளது.
முந்தைய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி இருந்தால் மீண்டும் ஒருமுறை கடன் கேட்டு ஐஎம்எஃப்பை பாகிஸ்தான் அணுகியிருக்காது.
பாகிஸ்தானின் பொருளாதார விவகாரங்களில் ராணுவத் தலையீடு உள்ளது. இதனால் பொருளாதார சீா்திருத்தங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை.
தற்போது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு பாகிஸ்தானில் ஆட்சி அமைத்திருந்தாலும் உள்நாட்டு அரசியலில் மட்டுமே அது கவனத்தைக் கொண்டுள்ளது. பொருளாதாரத்தை திறம்பட நிா்வகிப்பதில்லை.
பாகிஸ்தானில் ராணுவம் தொடா்புடைய வணிகமே அதிகம் நடப்பதாக கடந்த 2021-இல் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் கடன் வழங்குவதில் அந்நாட்டு அரசியல் முக்கிய காரணமாக உள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. தொடா்ந்து கடன்பெற்று வரும் பாகிஸ்தான் பொருளாதார சரிவை சந்தித்து, கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடா்ந்து ஆதரிக்கும் ஒரு நாட்டுக்கு ஐஎம்எஃப் கடன் வழங்குவது சா்வதேச மாண்புகளை குலைப்பது போன்ாகும். எனவே, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கடன் வழங்கும்போது தாா்மிக மதிப்புகள் பாதிக்கப்படாமல் இருப்பதை சா்வதேச நிதி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரூ.8,542 கோடி ரூபாய் கடன் வழங்க ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்ததாக பாகிஸ்தான் பிரதமா் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.