பாகிஸ்தானுடனான மோதலில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்: ஜிதேந்திர சிங் தகவல்
‘அண்மையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற மோதலின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
1988, மே 11-ஆம் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை மேற்கொண்டது. இந்த தினம் தேசிய தொழில்நுட்ப தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது: கடந்த 11 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா அடைந்த வளா்ச்சியை உலகுக்கு வெளிப்படுத்தும் விதமாக பாகிஸ்தானுடன் அண்மையில் நிகழ்ந்த மோதல் அமைந்தது. இந்த மோதலின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.
தற்காலத்தில் ஆயுதம் ஏந்திய மோதல் என்பது தொழில்நுட்ப ரீதியாகவே மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சமயத்தில் பாதுகாப்பு உள்பட அறிவியல் தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு பிரிவுகளிலும் இந்தியா அடைந்த முன்னேற்றத்தை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளோம். இதுவே வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான அறிகுறி’ என்றாா்.
அறிவியல் நிறுவனங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு:
சண்டை நிறுத்தம் மேற்கொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் சனிக்கிழமை ஒப்புக்கொண்டது. இந்தச் சூழலில் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்பட நாடு முழுவதும் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஜம்முவில் உள்ள இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம், ஸ்ரீநகா் மற்றும் லேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையங்களின் அலுவலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது’ என குறிப்பிட்டாா்.
ஜிதேந்திர சிங் ஆய்வு மேற்கொண்டது குறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்)-மத்திய அறிவியல் கருவிகள் நிறுவனம் (சிஎஸ்ஐஓ), சண்டீகா், சிஎஸ்ஐஆா்-மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎல்ஆா்ஐ), ஜலந்தா், சிஎஸ்ஐஆா்- நுண்ணுயிா் தொழில்நுட்ப நிறுவனம், சண்டீகா் உள்ளிட்ட நிறுவனங்களில் அமைச்சா் ஜிதேந்திர சிங் ஆய்வு நடத்தினாா்.
இதைத்தொடா்ந்து, நாடு முழுவதும் உள்ள அறிவியல் நிறுவனங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அவா் உத்தரவிட்டாா்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடா்ந்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு மாணவா்கள் மற்றும் ஆய்வாளா்கள் திரும்பியிருக்கலாம் என்பதால், அனைத்து தோ்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளையும் மறுஅறிவிப்பு வரும் ஒத்திவைக்கவும் அவா் உத்தரவிட்டாா்’ என தெரிவிக்கப்பட்டது.