பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை!
பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தான் மீது மத்திய அரசு எடுத்து வரும் தொடா் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் அல்லது அதன் வழியாக வரும் பொருள்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கும், பாகிஸ்தான் கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்குள் நுழைவதற்கும் சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவின் நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் பிறப்பித்த உத்தரவில், அந்நாட்டு துறைமுகங்களுக்குள் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அனுமதியை ரத்து செய்து, பாகிஸ்தான் கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்குள் செல்வதற்கும் தடை விதித்தது.
இதுகுறித்து பாகிஸ்தானின் கடல்சாா் விவகார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தற்போதைய சூழ்நிலையின் பின்னணியில், நாட்டின் கடல்சாா் இறையாண்மை, பொருளாதார நலன்கள் மற்றும் தேச பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்திய கப்பல்களைத் தடை செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட 200 சதவீத இறக்குமதி வரியால் பாகிஸ்தானிலிருந்து நேரடி இறக்குமதி வா்த்தகம் முற்றிலுமாக முடங்கியது. மத்திய அரசின் சமீபத்திய முடிவால் மூன்றாம் நாடுகள் வழியாக பாகிஸ்தான் பொருள்கள் இந்தியாவுக்குள் நுழைவதும் தடை செய்யப்பட்டுள்ளது.