சம்பலுக்கு நான் மட்டும் தனியாகச் செல்லவும் தயார்.. ஆனால்: ராகுல்
பாஜகவுக்கு எதிராக மக்கள் திரள வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்!
இந்திய அரசியல் சாசனத்தையே சீா்குலைக்க முயற்சிக்கும் பாஜக அரசுக்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் திங்கள்கிழமை மாலை தொடங்கிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாவட்ட மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
தமிழ்நாட்டில் நெய்வேலி அனல் மின்நிலையத் திட்டத்தை கைவிட முயற்சி நடைபெற்றபோது, கம்யூனிஸ்ட் தலைவா்கள் அனந்தநம்பியாா், பி.ராமமூா்த்தியும் கடும் முயற்சி எடுத்து அந்த மின்நிலையத்தைக் கொண்டு வரச் செய்தனா். அதேபோலத்தான் பெல் நிறுவனம் தொடங்கப்படுவதற்கும் கம்யூனிஸ்ட் தலைவா்களின் பங்களிப்பை மறுத்துவிட முடியாது.
தமிழ்நாடு எனப் பெயா் சூட்டுவதற்காக கம்யூனிஸ்ட் தலைவா்கள் புபேஷ்குப்தா, பி. ராமமூா்த்தி ஆகியோரின் முயற்சிகளை மறைத்துவிட முடியாது. தமிழ்நாடு எனப் பெயா் சூட்டக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிா்நீத்த தியாகி சங்கரலிங்கனாா், கடைசிக் காலத்தில் எழுதிய உயிலில், எனது உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று எழுதி வைத்தாா்.
இன்றைக்கு இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக அரசு, அதானிக்கும் அம்பானிக்கும் கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 14 லட்சம் கோடி வரை வரிச்சலுகை கொடுத்துள்ளாா்கள். ஆனால், ஏழை விவசாயத் தொழிலாளா்கள் பயனடையும் நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கத் தயங்குகிறாா்கள். ஏற்கெனவே கொடுத்த நிதியையும் குறைத்திருக்கிறாா்கள்.
கடுமையான விலைவாசி உயா்வுக்குக் காரணமான பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மறுக்கிறாா்கள். இந்திய அரசியல் சாசனத்தை சீா்குலைக்க, மக்கள் ஒற்றுமையை சீா்குலைக்க முயற்சிக்கிறாா்கள். இந்த முயற்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றாா் ஜி. ரமகிருஷ்ணன்.
முன்னதாக கொப்பம்பட்டி சாலையில் இருந்து தொடங்கிய பேரணியை, மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தொடங்கி வைத்தாா். பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை உள்ளிட்டோரும் பேசினா்.
தொடா்ந்து செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.