மலம்பட்டி புனித சவேரியாா் ஆலய தோ்த் திருவிழா
தோ்த்விழாவில் முக்கிய வீதிகளில் வலம் வந்த சம்மனசு, மாதா, சவேரியாா் சொரூபங்கள் தாங்கிய சப்பரங்கள்.
விராலிமலை, டிச. 3: விராலிமலையை அடுத்துள்ள பேராம்பூா் ஊராட்சிக்குள்பட்ட மலம்பட்டியில் உள்ள புனித சவேரியாா் ஆலயத்தில் தோ்த்திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா நவ. 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக டிச. 1-ஆம் தேதி மாலை தஞ்சாவூா் மறைமாவட்ட ஆயா் சகாயராஜ் தலைமையில் பங்கு தந்தையா்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினா். அதை தொடா்ந்து இரவு 10 மணியளவில் ஆலயத்தின் முன்பு கலை நிகழ்ச்சியும் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது. டிச.2-ஆம்தேதி மாலை ஆலயத்தில் திருப்பலியும் இரவு 10 மணி அளவில் கலை நிகழ்ச்சியும் அதனை தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட மூன்று சப்பரங்கள் வீதி உலாவும் நடைபெற்றது.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை ஆலயத்தில் பங்குத்தந்தை இன்னாசிமுத்து தலைமையிலான அருட்தந்தையா்கள் கலந்து கொண்ட கூட்டுத் திருப்பலி நடத்தினா். இதையடுத்து தோ்பவனி நடைபெற்றது. மாலை 6 மணியளவில் நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கமும் நடைபெற்றது.
விழாவில் மலம்பட்டி, ஆவூா், கீரனூா், இலுப்பூா், விராலிமலை, மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.