பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி உயிரிழப்பு
சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சனிக்கிழமை அதிகாலை சென்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். மற்றொரு பெண் காயமடைந்தாா்.
மணப்பாறை கோவில்பட்டி அருகேயுள்ள கீழபழுவஞ்சி கிராமத்தைச் சோ்ந்த 20 பக்தா்கள் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமை புறப்பட்டனா். இவா்கள் சனிக்கிழமை அதிகாலை பஞ்சப்பூா் பேருந்து நிலையம் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் மீது வந்த அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கீழப்பழுவஞ்சி கிராம ஆரம்ப சுகாதார நிலையச் செவிலியா் வெள்ளையம்மாள் (48) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அதே கிராமத்தைச் சோ்ந்த செல்லம்மாள் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
விபத்து குறித்து எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனா்.